Wednesday, April 23, 2003கடவுள் ஆணா? பெண்ணா?

ஏவாளுக்குப் போரடிக்கத் துவங்கியது. ஈடன் தோட்டம் முழுவதையும் சுற்றி வந்து விட்டாள்.அழகிய சிற்றோடைகளும், அருவியும், பசும்புல் வெளியும், மலர்த்தோட்டங்களும், மலைச்சாரலும், அடர்ந்த வனங்களும் போரடித்து விட்டன.
"கடவுளே!" என்று அழைத்தாள். கடவுள் அவள் முன் தோன்றினார். அவர் பார்வை அவள் கையில் இருந்த ஆப்பிள் மீது படிந்தது. " இந்த ஆப்பிளைச் சாப்பிடாதே!" என்று எத்தனை முறை உனக்குச் சொல்லியிருக்கிறேன்?" என்று ஏவாளைக் கடிந்து கொண்டார் கடவுள்.

"ச். போங்க!" என்று சலித்துக் கொண்டாள் ஏவாள்.
"என்ன பசிக்கிறாதா?" என்றார் கடவுள்.
"இல்லை. போரடிக்கிறது"
" என்ன வேண்டும்?"
"எனக்குப் பேச்சுத் துணைக்கு இன்னொரு மனித உயிரைப் படைத்துக் கொடுங்கள்" என்றாள் ஏவாள்
கடவுள் யோசித்தார். பின் சொன்னார்.:
"சரி. படைத்துவிடலாம். ஆனால் மூன்று நிபந்தனைகள்." என்றார்.
"என்ன?'
முதல் நிபந்தனை: அந்த உயிர் உருவம், உள்ளம் எல்லாவற்றிலும் உனக்கு நேர் எதிரானதாக இருக்கும். அங்கே பொறுமை இராது. அவசரம் இருக்கும். கனிவு இருக்காது, முன் கோபம் இருக்கும். அங்கே மென்மை இருக்காது, முரட்டுத்தனம் இருக்கும்."
"ஏன் அப்படி படைக்க வேண்டும்?"
"அப்போதுதான் அவனோடு மல்லுக்கட்டவே உனக்கு நேரம் சரியாக இருக்கும். போரடிக்கிறது என்று சொல்ல மாட்டாய்"
சற்று யோசித்த ஏவாள் சரி என்றாள்." இரண்டு நிபந்தனைகள் என்றீர்களே இன்னொன்று என்ன?"
"அவன் நம்மைப் போல் இல்லை. அவனுக்கு ஈகோ அதிகம். உன்னைத்தான் முதலில் படைத்தேன் என்று அவனுக்குத் தெரியவந்தால் அவனால் தாங்க முடியாது. அதனால் அவனைத்தான் முதலில் படைத்தேன், அவன் விலா எலும்பிலிருந்துதான் உன்னைப் படைத்தேன் என்று அவனுக்கு சொல்லி அனுப்பப் போகிறேன். நீ ரகசியத்தைப் போட்டு உடைத்து விடக்கூடாது"
"சரி போனால் போகிறது, விட்டுக் கொடுத்து விடுகிறேன்?" என்றாள் ஏவாள்
"இன்னொரு விஷயம். இந்த ரகசியம் நம் இருவருக்கு மட்டும்தான் தெரிய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொMடும் வெளியே சொல்லிவிடாதே!"
"ஏன் சொல்லக் கூடாது?'
"அதான் சொன்னேனே, அவனுக்கு ஈகோ அதிகம். நாம் இரண்டாவதாகத்தான் படைக்கப்பட்டோ ம் என்பதையே தாங்க முடியாதவனால், கடவுள் என்பவரும் உன் போல் பெண்தான் என்ற விஷயத்தை எப்படித் தாங்க முடியும்?" என்றாள் கடவுள்.

கடவுள் ஆணா? பெண்ணா? ஏன் பெண்ணாக இருக்கக்கூடாது என்று, ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண் படைக்கப்பட்டாள் என்பதை மாற்றி எழுத வேண்டும் என்று வாதாடி வரும் பெண்கள் இந்தக் கதையைச் சொல்லிக் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஐரோப்பா கிடக்கட்டும். தமிழ் மரபென்ன? ஆதி பகவன், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், மலர் மிசை ஏகினான் எண்குணத்தான் என்று கடவுளை ஆணாகவே கருதி எழுதுகிறார் வள்ளுவர்.

வள்ளுவர் காலத்தில், பெண் ' ஒண்ணுந்தெரியாத' பிறவியாகக் கருதப்பட்டாள் என்பதற்குப் பல சான்றுகளைச் சொல்ல முடியும். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்க்கு உரை எழுதும் பரிமேலழகர், "பெண்மைக் குணத்தினால் தானாய் அறியமாட்டாமையால் கேட்டதாய்" என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகக் கருதுகிறார். விவரம் அறியாதவளாகப் பெண் கருதப்பட்ட காலத்தில் அவளை சர்வ வல்லமை பொருந்திய கடவுளாகச் சித்தரிக்க யார் முனைவார்கள். அதனால் வள்ளுவத்தை விட்டுவிடலாம்.

அதற்குப் பல ஆண்டுகாலம் பிற்பட்ட பெரிய புராணம், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்று துவங்குகிறது. ஜோதியன், ஆடுவான் என்று அடுத்தடுத்து ஆணாகவே கடவுளை விவரிக்கிறது. இறைவனே முதலடி எடுத்துக் கொடுக்க சேக்கிழார் இயற்றிய காவியன்ம் பெரிய புராணம் என்பதால் இதை கடவுளுடைய ஒரு சுய அறிமுகமாக (self introduction) எடுதுக்கொள்ளலாமா?

கம்பர் இந்த வம்பே வேண்டாம் என்று, 'தலைவர்' என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு பொதுச் சொல்லைப் பயன்படுத்தி 'அவருக்கு' சரண் நாங்களே என்று காலில் விழுந்துவிடுகிறார்.

ராமன், கிருஷணன், சிவன், விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி என்று கடவுள் என்ற கருத்தாக்கத்திற்கு ஆண் பெண் என்ற தோற்றங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கடவுளைப் பொன்னார் மேனியனாகவோ, பச்சைமாமலை போல் மேனியாகவோ, கதிர் மதியம் போல் முகத்தானாகவோ கவிஞர்கள் கற்பனையைக் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பு, இயற்கையைக் கடவுளாக மனிதர்கள் கண்ட
காலத்தில் கடவுள் ஆணா? பெண்ணா?

இளங்கோவடிகள், கடவுள் வாழ்த்துப் பாடுவதில்லை. மங்கல வாழ்த்துப் பாடுகிறார். சூரியன், மழை இரண்டையும் வாழ்த்தும் பாடல்கள் அதில் இடம் பெறுகின்றன.
காவிரி, வைகை ஆகிய நதிகளைப் பெண்ணாக வர்ணிக்கும் இளங்கோ மழை ஆணா பெண்ணா என்று குறிப்பிடுவதில்லை. ஆனால் பூமியைப் பெண்ணாகக் குறிப்பிடுகிறார். ( வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்)

வைதீக மதங்கள், பஞ்ச பூதங்களில் மண்ணைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஆண்களாகவே குறிப்பிடுகின்றன. மழையின் கடவுள் இந்திரன் ( பலர் நினைப்பது போல் வருணன் அல்ல. வருணன் கடலின் கடவுள். அவனது வாகனமே மீன் -மகரம்-தான்) என்ற கருத்தாக்கம் வைதீக மதங்களோடு வந்ததாக இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ் மரபில், நிலம் என்னும் நல்லாள் மட்டுமல்ல, மழையும் கூடப் பெண் கடவுள்தான். சான்று இன்றும் வணங்கப்படும், 'மாரி' அம்மன். மழைக்குத் தமிழில் 'எழிலி' (அழகானவள்) என்று ஒரு சொல் இருக்கிறது.

அக்னியைக் கும்பிடும் வழக்கமும் வைதீக மதங்களோடுதான் வந்திருக்க வேண்டும். அக்னியைக் கும்பிட ஆரம்பித்த கலாசாரத்தில், இந்திரன் மழைக்கடவுளாகியிருக்க வேண்டும். புறநானுற்றில் 'பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி' என்று ஒரு பெயர் குறிப்பிடப்படுகிறது. அவர் முந்நீர் விழவு என்று மழைக்காக விழாக்கள் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விழாக்கள்தான் இந்திர விழாக்களாக ஆகியிருக்க வேண்டும். சிலப்பதிகார இந்திர விழா மழை வேண்டி நடந்த விழா அல்ல. அது கோடைகாலத்தில், சித்திரை மாதத்துப் பெளர்ணமி அன்று நடைபெற்ற வசந்த விழா. அப்போது காவிரி நீர் நிறைந்து மலர்கள் சூடி நடந்ததாக மாதவி வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள். வைதீக மதங்கள் வருவதற்கு முன் மழை வேண்டி நடந்த விழாக்களில், இந்திரனிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.பாரியைப் போல இன்னொரு வள்ளல் பேகன் அவன் காலத்தில் வாழ்ந்த கபிலர், மழை வேண்டிப் பாடிய பாடலில் இந்திரனைக் காணோம். அவர் வேண்டிய கடவுள் முருகனாக இருந்திருக்கலாம்.

தொல்காப்பியத்தில் வருணன் என்ற சொல்லைப் பயன்படுத்தும் தொல்காப்பியர் இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. மாறாக வேந்தன் என்று எழுதுகிறார். வேந்தன் என்றால் அரசன் என்றும் கூடப் பொருள் கொள்ளலாம்.

பழந்தமிழ் நூல்களில் நெருப்பை முன்னிறுத்திச் சடங்குகள் செய்தாக அதிகம் தகவல்கள் இல்லை. தமிழில் அக்னி தீ என்று சொல்லப்படுகிறது. நல்லது அல்ல என்பதற்கு முன் அடையாகப் (prefix) பயன்படுத்தப்படுவதும் இந்தச் சொல்தான்.(உதாரணம்: தீ வினை) ஆனால் நீர் நிலைகளைக் குறிப்பதற்கு ஏராளமான சொற்கள் இருக்கின்றன. அருவி, ஆறு, சுனை, துறை, ஓடை, துருத்தி, கடல், ஊற்று, பொய்கை, மடு, குழி, குளம், ஆவி, வாவி, செறு, கேணி, கிணறு, ஊருணி, ஏந்தல், தாங்கள், இலஞ்சி, கோட்டகம், ஏரி, அனை, கால்வாய், மடை, சமுத்திரம், வாரிதி, தீர்த்தம் இவை அனைத்தும் நீர் இடங்களை (water sources) தமிழ் சொற்கள். இந்தப் பெயர்களில் அமைந்த பல ஊர்கள் இப்போதும் தமிழ் நாட்டில் இருக்கின்றன.

நீர் நிலைகளைக் காவல் காக்கும் தெய்வமாக பெண்களை பெளத்த மரபிலும் குறிப்பிடுகிறார்கள். சம்பாபதி என்பது அந்தத் தெய்வத்தின் பெயர்.இதற்கான ஆதாரங்கள் மணிமேகலையில் இருக்கின்றன. புத்த சாதக கதைகளில் ஒரு மணிமேகலை வருகிறார். அவரைக் கடல் தெய்வமாக, கடல் பயணம் செல்வோருக்கு ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றும் தெய்வமாக அந்தக் கதைகள்
சித்தரிக்கின்றன.

கெடுதி செய்யும் பெண் தெய்வங்களையும் பற்றி இளங்கோ எழுதுகிறார்: மதுரைக்கு வரும் வழியில், காட்டில், தாகத்தில் தவிக்கும் கண்ணகிக்குத் தாமரைப் பொய்கையிலிருந்து நீர் கொண்டு வரச் செல்லும் கோவலனை வனசாரிணி என்ற கானுறை தெய்வம் மயக்க முயல்வதாக சிலப்பதிகாரத்தில் ஒர் காட்சி விரிகிறது.

இயற்கை வழிபாடு இருந்த காலத்தில் கடவுள் பெண்ணாக இருந்திருக்கிறார். அவர் ஆணாக எப்போது மாறினார் என்பதுதான் என் கேள்வி. வைதீக மதங்கள் வந்த பின்னரா? அல்லது அதற்கும் முன்னரேவா? மலையாளிகளைப் போலத் தமிழ் சமூகமும் தாய் வழிச் சமூகமாக இருந்ததா? அப்படியானால் அது தந்தைவழிச் சமூகமாக மாறியது எப்போது? கி.பி.10ம் நூற்றாண்டு வாக்கில் என்று ஒரு கருத்து இருக்கிறது, அது உண்மைதானா? தந்தை வழிச் சமுகமாக மாறியதால்தான் கடவுளும் ஆண் ஆனாரா?

மற்ற மரபுகளில் - குறிப்பாக நம்மைப் போலவே பழமை வாய்ந்த சீன மரபில்- என்ன சொல்கிறார்கள்? கடவுள் ஆணா? பெண்ணா/
ஏன் இப்போது இந்தக் கேள்விகள் என்கிறீர்களா? அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததா என்று அகழ்வராய்ச்சித் துவங்கியிருக்கிறது.நாமும் நம் பக்கத்தில் தோண்டி வைப்போமே என்று இலக்கியத்தில் கை வைத்தேன். அது கேள்விகள் என்னும் சுரங்கத்தில் இறக்கி விட்டது.

இது குறித்து நன்கு அறிந்த இலக்கிய வல்லுநர்கள், மானிடவியல் அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் யாராவது கை தூக்கி விடுவார்களா? ( அவர்கள் ஆண்களாகவும் இருக்கலாம், தப்பில்லை)

Tuesday, April 22, 2003பாரதியும் இஸ்லாமும்
மாலன்

" மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் 'உங்க' பாரதியார்?" என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார்.

"சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை"

"அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?"

"சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்"

"சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்"

"நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்" என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார்.கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், " என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்" என்றார்.

"பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்."

"நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?"

நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று:

நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார்.அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள்"

பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார்." இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?" என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு.

"சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ' பரமாத்மாவான அல்லா ஹீத்த ஆலா அருள் புரிவாராக' என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்?"

"இது என்ன புதுக் கதை?"

"இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள்.அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது."

"படியுமேன். கேட்போம்"

"நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்"

"மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?"

" 'மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்' என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?"

"நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்"

நான் படித்துக் காட்டினேன்:" எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்."

"அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?"

"படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்:
"பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்"

"கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?"

பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும் இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில், 1905ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.

அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார்."

"அவருக்கு இஸ்லமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?"

"அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் 'தாடி ஐயர்' (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை.' ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து' என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின்னும், 1918ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார்."

"இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?"

"இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை.' கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?' ' வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்' என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.

பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார்."

"ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?"

"அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது: " நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும்" என்று ஓரிடத்தில் எழுதுகிறார்".

வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர்.
"ஓ! அப்படியா!அப்ப நான் வர்ரேன். உங்க 'பாய்' பாரதியாரிடமும் சொல்லுங்க!' என்றார் நண்பர் கிண்டலாக.

நான் புன்னகைத்தேன்.Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது