Monday, April 04, 2005

திசைகாட்டி

இது திசைகள் வாசகர்களுக்கான- குறிப்பாக வலைபதிவர்களுக்கான - வலைப்பூ. திசைகள் இதழ் குறித்து அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகளை இங்கே காணலாம்

Friday, June 27, 2003

காலோரம் அலை புரண்டு கெஞ்சும்
எனினும்
வானோரத் தாரகைக்கே ஏங்கும் நெஞ்சம்

Monday, June 09, 2003

என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன்.இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்ரி, பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.
"எது ஜெயிக்கும்?"
"நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்"
"எப்படி? புரியவில்லையே?'
"எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து குட்டியோ ஈவிலோ ஜெயிக்கும்"
சரி, நம்முடைய கல்வி முறை, சமகால இலக்கியங்கள், சினிமா இவை எல்லாம் 'குட்டி'க்குத் தீனி போடுகின்றனவா? அல்லது ஈவிலுக்கா?

யோசனை மனதைப் பிறாண்டத் துவங்கியது. செய்தித்தாள் படிக்கும் போது சிந்தனை கூடாது என்று மனதிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் சிந்தனை என்பது காபி குடிப்பது, குளிப்பது போல ஒரு பழக்கத்தின் காரணமாக நேர்கிற செயலா? காற்றுப் போல அது நினைத்த நேரத்திற்கு வந்து வருடிக் கொடுக்கும் அல்லது குப்பை சேர்க்கும்.
"சீ! சும்மாயிரு!" என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.அங்கே என் கண்ணில் பட்டது இந்த செய்தி. "உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?" என்று ஒரு பெரிய கேள்விக் குறியை வீசித் துவங்கியது செய்தி.
ஐ.நா.சபையின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒர் ஆய்வு, இந்தியாவில் தயாராகும் படங்களில் முக்கால்வாசிப் படங்கள்- துல்லியமாகச் சொல்வதானால் 76 விழுக்காடு- புகைபிடிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறது. அதிலும் புகழ் பெற்ற, மக்களிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நடிக நடிகையர்கள், உதாரணமாக அமிதாப் பச்சன், ஷாரூக்க்கான், ரஜனிகாந்த் அந்தக் காட்சிகளில் நடிப்பதாகவும் அது கவலைப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் ஒன்றரைக் கோடி பேர் சினிமாப் பார்க்கிறார்கள், ஆண்டொன்றுக்கு 900 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று கணக்குச் சொல்லி, சினிமா இந்த அளவிற்குப் பிரபலமாக இருப்பதால் புகை பிடிக்கும் பழக்கமும் வலுவாக வேரூன்றியிருக்கிறது என்று அந்த ஆய்வு ஆதங்கப்படுகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் விடக் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் புகையிலைப் பழக்கம் உள்ள 28 கோடிப் பேரில் 50 லட்சம் பேர் குழந்தைகள்! நாளுக்கு நாள் பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதிகரித்து வருகிறது, அதற்கு சினிமாக்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கறுப்பு -வெள்ளைக் காலத்தில், ஒரு பாத்திரத்தை வில்லனாகக் காட்ட சிகரெட் பயன்பட்டது. கழுத்தில் கர்சீப், கட்டம் போட்ட சட்டை, கலைந்த தலை, வாயில் புகையும் சிகரெட் இவை இருந்தால், அவர் வில்லன் என்று பார்த்தவுடனேயே ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக நிஜ வாழக்கையில் புகை பிடித்த சில நல்லவர்கள் கூட, அதை பகிரங்கமாகச் செய்யத் தயங்கினார்கள். உதாரணம்: காமராஜர். அவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர் புகை பிடிப்பது போல் புகைப்படம் ( சிலேடை அல்ல) எடுக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

எம்.ஜி.ஆர். தனது எந்தத் திரைப்படத்திலும் புகை பிடித்ததில்லை. இமேஜ பற்றிய கவனம் மட்டுமல்ல இதற்குக் காரணம். அவர் தனது பாத்திரங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் அறிந்து வைத்திருந்தார் என்று கருத இடம் இருக்கிறது. " சத்தியமாகச் சொல் நீ மனிதன்தானா? இல்லை நீதான் ஒரு மிருகம், அந்த மதுவில் விழும் நேரம்" என்று அவர் திரையில் பாடியதைக் கேட்டுத் தற்காலிகமாகக் குடிப்பதை நிறுத்தியவர்கள் உண்டு.

இன்றைய தமிழ் சினிமாவிற்கு, மதுவிற்கு எதிராகவோ, புகைக்கு எதிராகவோ பேசும் தைரியம் கிடையாது. மாறாக அது இன்று புலம்பல் களஞ்சியம். ' திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, தம் அடிச்சா திட்றாங்க, தண்ணியடிச்சா திட்றாங்க, சைட் அடிச்சா திட்றாங்க, ரைட் கொடுத்தா திட்றாங்க, திட்றாங்க திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, டாடியும் மம்மியும் திட்றாங்க' என்று அது கிடந்து புலம்புகிறது.பின் இதையெல்லாம் செய்தால் அப்பாவும் அம்மாவும் பூரித்து புளாகாங்கிதம் அடைந்து, உச்சி மோந்து, திருஷ்டி சுத்தி, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பார்களா?

சரி, மதுவிற்கு எதிராகப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், ஏன் புகை பிடிப்பதற்கு எதிராகத் திரைப்படத்தில் எந்த பிரசாரமும் செய்யவில்லை? சரித்திரத்தில் விடை காணமுடியாத மில்லியன் டாலர் கேள்விகளில் இதுவும் ஒன்று. அவர் அதைப் பெரிய விஷயமாகக் கருதாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்தப் பிரசாரம் பலன் தராமல் போய் அது தனது செல்வாக்கிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகக் கருதப்பட்டுவிடும், எதற்கு ரிஸ்க் என்று எண்ணியிருக்கலாம்.
ஆனால் தனது விளம்பர வருமானத்தைப் பெரிதாகக் கருதாமல், சிகரெட் விளம்பரங்களை வெளியிடப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது ஆனந்த விகடன். அது புகைப்பதற்கு எதிராகக் கொஞ்சநாள் போராட்டமும் நடத்திப் பார்த்தது. ஆனால் பத்திரிகையாளர்களால்- விகடனில் பணியாற்றிய சில பத்திரிகையாளர்களையும் சேர்த்துத்தான் - கை விட முடியாத ஒரு வழக்கமாக இருந்தது புகை பிடிக்கும் பழக்கம்.

நான் குமுதம் ஆசிரியராகப் பணியாற்றியபோது, சென்னைக்கு வந்த அன்னை தெரசாவைப் பேட்டி கண்டு வருமாறு ஒரு நிருபரை அனுப்பியிருந்தேன். அந்த நிருபருக்குப் புகை பிடிக்கும் பழக்கமுண்டு.தெரசா பேட்டிக்கு வரச் சொல்லியிருந்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே சென்று விட்ட அவர், காத்திருக்கும் போது போரடித்ததால், புகைபிடிக்க ஆரம்பித்தார்.மூடப்பட்ட ஒரு அறைக்கு முன்னால் வராந்தாவில் அவர்
நின்று புகைத்துக் கொண்டிருந்தார். தெரசா அந்த அறைக்குள்தான் இருக்கிறார், வேறு யாருடனோ பேசிக் கொண்டிருகிறார், நம்முடைய நேரம் வரும் போது நம்மை அழைப்பார்கள், அதற்கு முன்னதாக சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பாக்கை மென்றுவிட்டு உள்ளே போய் விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்தது போல் தெரசா அறைக்குள் இல்லை. பேட்டிக்கு சில நிமிடங்கள் முன் தெரசா விறுவிறுவென்று அந்த அறையை நோக்கி வரத் துவங்கினார். வரும் போது அறைவாசலில் புகை பிடித்துக் கொண்டு நின்றிருந்த நிருபரையும் பார்த்து விட்டார்.

நிருபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவர் தெரசாவிடம் கேள்விகள் கேட்கும் முன், தெரசா அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்." புகை பிடிப்பீர்களா?' என்பது முதல் கேள்வி. கையும் புகையுமாகப் பிடிபட்டபின் இல்லை என்றா சொல்ல முடியும். சரி, புகை பிடிப்பதைப் பற்றி ஏதாவது அறிவுரை சொல்லுவார், அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடலாம் என்று எண்ணிக் கொண்ட நிருபர், " ஆமாம். பத்துப்பதினைந்து வருடமாகப் புகைக்கிறேன். பழகிப் போய் விட்டது" என்றார். தெரசா புகையின் தீமைகள் பற்றி உபதேசம் ஏதும் செய்யவில்லை. மாறாக, "ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்?" என்றார்.
"பத்து அல்லது பனிரெண்டு" என்றார் நிருபர்.
"அதற்கு என்ன செலவாகும்?"
"பத்து பதினைந்து ரூபாய் ஆகும்."
"நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மிச்சமாகும் அந்தத் தொகையை எனக்கு நன்கொடையாகத் தருவீர்களா?" என்றார் தெரசா
நிருபர் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"அது ஒன்றும் பெரிய தொகையாக இராது மதர்." என்று நழுவப் பார்த்தார் நிருபர்.
"மாதம் முன்னூறு, நானூறு ரூபாய். அதை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு மாதம் முழுக்க இரண்டு வேளை பசியாற்றலாம் தெரியுமா?" என்றார். நிருபர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தார்.
" நான் என்னுடைய பணியைத் துவக்கியபோது என் கையில் இருந்த பணம் வெறும் பத்து ரூபாய். அது ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல உதவியது.அங்கு அவரது ரணங்களைக் கழுவி மருந்திட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள். அது அவரது வாழ்வில் ஒரு திருப்பம். எல்லோராலும் அருவருப்பாக உணரப்பட்டுக் கவனிப்பாரின்றி தெருவோரமாகக் கிடந்த நம்மையும் கவனிக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, அவருக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை பிறந்தது. அதற்குத் தேவைப்பட்டது வெறும் பத்து ரூபாய். சேவை செய்ய அதிகப் பணம் தேவையில்லை. ஆனால் சேவை செய்பவர்களுக்கு ஒவ்வொரு பைசாவும் பெரிய உதவி" என்று சொல்லிய தெரசா, நிருபரிடம், இனிப் புகை பிடிப்பதில்லை, அதற்கு செலவிட்டு வந்த பணத்தை தர்மத்திற்குக் கொடுக்கிறேன் என்று உறுதி வாங்கிக் கொண்டுதான் பேட்டிக்கு சம்மதித்தார்.
தமிழ் சினிமாக்கள் மதர் தெரசா இல்லை.புகை பிடிப்பவர்கள் மனதில் தர்ம சிந்தனையை விதைக்க அவை முன் வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் செலுத்தும் கவனத்தில் பத்தில் ஒரு பங்கை சமூக நலன்களைப் பேணுவதில் காட்டக் கூடாதா?

திருட்டு விசிடியை எதிர்த்து ஊர்வலம் போகப் போவதாக, முதல்வரை சந்தித்து மனுக் கொடுக்கப் போவதாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முயற்சி.

சரி, திருட்டு வி.சி.டி.கள் எங்கிருந்து முளைக்கின்றன? அவை விதை போட்டு விளைவதில்லை. வானத்திலிருந்து குதிப்பதில்லை.சினிமா உலகத்தில் இருந்து சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களால்தான் உருவாகின்றன. அதற்கு ஏன் வீதியில் இறங்கி ஊர்வலம் போகவேண்டும்? அறைக்குள் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டிய விஷயமல்லவா இது? தங்களது பேராசைக்குக் கடிவாளம் போட வேண்டிய விஷயத்திற்கு, ஊராரை ஏன் உசுப்பி விட வேண்டும்?

இந்த விசிடி விஷயத்தில் காட்டுகிற அக்கறையில். பத்தில் ஒரு பங்கை தமிழ்த் திரைப்படங்களில் புகைப் ப்டிக்கும் காட்சிகளைக் காண்பிப்பதில்லை, பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை அனுமதிப்பதில்லை, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதில்லை, ஜாதிப் பெயர் வருவது போலத் தலைப்பு வைப்பதில்லை என்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் காட்டலாமே? இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் போகலாமே? கோஷங்கள் எழுப்பலாமே?
'குட்டி'யைத் தூக்கி வைத்துக் கொஞ்சாவிட்டாலும் பரவாயில்லை, ஈவிலுக்குப் போடுகிற ரொட்டியைக் குறைத்துக் கொள்ளலாமே? செய்யுமா திரை உலகம்? அல்லது திரைக்கு வெளியிலும் வேஷம் போடுமா?
*



Tuesday, May 13, 2003

கல்லூரியை இடிக்கக்
காத்திருக்கிறார் அரசி
இப்போதாவது பாடம் கற்றீர்களா?

Wednesday, April 23, 2003



கடவுள் ஆணா? பெண்ணா?

ஏவாளுக்குப் போரடிக்கத் துவங்கியது. ஈடன் தோட்டம் முழுவதையும் சுற்றி வந்து விட்டாள்.அழகிய சிற்றோடைகளும், அருவியும், பசும்புல் வெளியும், மலர்த்தோட்டங்களும், மலைச்சாரலும், அடர்ந்த வனங்களும் போரடித்து விட்டன.
"கடவுளே!" என்று அழைத்தாள். கடவுள் அவள் முன் தோன்றினார். அவர் பார்வை அவள் கையில் இருந்த ஆப்பிள் மீது படிந்தது. " இந்த ஆப்பிளைச் சாப்பிடாதே!" என்று எத்தனை முறை உனக்குச் சொல்லியிருக்கிறேன்?" என்று ஏவாளைக் கடிந்து கொண்டார் கடவுள்.

"ச். போங்க!" என்று சலித்துக் கொண்டாள் ஏவாள்.
"என்ன பசிக்கிறாதா?" என்றார் கடவுள்.
"இல்லை. போரடிக்கிறது"
" என்ன வேண்டும்?"
"எனக்குப் பேச்சுத் துணைக்கு இன்னொரு மனித உயிரைப் படைத்துக் கொடுங்கள்" என்றாள் ஏவாள்
கடவுள் யோசித்தார். பின் சொன்னார்.:
"சரி. படைத்துவிடலாம். ஆனால் மூன்று நிபந்தனைகள்." என்றார்.
"என்ன?'
முதல் நிபந்தனை: அந்த உயிர் உருவம், உள்ளம் எல்லாவற்றிலும் உனக்கு நேர் எதிரானதாக இருக்கும். அங்கே பொறுமை இராது. அவசரம் இருக்கும். கனிவு இருக்காது, முன் கோபம் இருக்கும். அங்கே மென்மை இருக்காது, முரட்டுத்தனம் இருக்கும்."
"ஏன் அப்படி படைக்க வேண்டும்?"
"அப்போதுதான் அவனோடு மல்லுக்கட்டவே உனக்கு நேரம் சரியாக இருக்கும். போரடிக்கிறது என்று சொல்ல மாட்டாய்"
சற்று யோசித்த ஏவாள் சரி என்றாள்." இரண்டு நிபந்தனைகள் என்றீர்களே இன்னொன்று என்ன?"
"அவன் நம்மைப் போல் இல்லை. அவனுக்கு ஈகோ அதிகம். உன்னைத்தான் முதலில் படைத்தேன் என்று அவனுக்குத் தெரியவந்தால் அவனால் தாங்க முடியாது. அதனால் அவனைத்தான் முதலில் படைத்தேன், அவன் விலா எலும்பிலிருந்துதான் உன்னைப் படைத்தேன் என்று அவனுக்கு சொல்லி அனுப்பப் போகிறேன். நீ ரகசியத்தைப் போட்டு உடைத்து விடக்கூடாது"
"சரி போனால் போகிறது, விட்டுக் கொடுத்து விடுகிறேன்?" என்றாள் ஏவாள்
"இன்னொரு விஷயம். இந்த ரகசியம் நம் இருவருக்கு மட்டும்தான் தெரிய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொMடும் வெளியே சொல்லிவிடாதே!"
"ஏன் சொல்லக் கூடாது?'
"அதான் சொன்னேனே, அவனுக்கு ஈகோ அதிகம். நாம் இரண்டாவதாகத்தான் படைக்கப்பட்டோ ம் என்பதையே தாங்க முடியாதவனால், கடவுள் என்பவரும் உன் போல் பெண்தான் என்ற விஷயத்தை எப்படித் தாங்க முடியும்?" என்றாள் கடவுள்.

கடவுள் ஆணா? பெண்ணா? ஏன் பெண்ணாக இருக்கக்கூடாது என்று, ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண் படைக்கப்பட்டாள் என்பதை மாற்றி எழுத வேண்டும் என்று வாதாடி வரும் பெண்கள் இந்தக் கதையைச் சொல்லிக் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஐரோப்பா கிடக்கட்டும். தமிழ் மரபென்ன? ஆதி பகவன், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், மலர் மிசை ஏகினான் எண்குணத்தான் என்று கடவுளை ஆணாகவே கருதி எழுதுகிறார் வள்ளுவர்.

வள்ளுவர் காலத்தில், பெண் ' ஒண்ணுந்தெரியாத' பிறவியாகக் கருதப்பட்டாள் என்பதற்குப் பல சான்றுகளைச் சொல்ல முடியும். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்க்கு உரை எழுதும் பரிமேலழகர், "பெண்மைக் குணத்தினால் தானாய் அறியமாட்டாமையால் கேட்டதாய்" என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகக் கருதுகிறார். விவரம் அறியாதவளாகப் பெண் கருதப்பட்ட காலத்தில் அவளை சர்வ வல்லமை பொருந்திய கடவுளாகச் சித்தரிக்க யார் முனைவார்கள். அதனால் வள்ளுவத்தை விட்டுவிடலாம்.

அதற்குப் பல ஆண்டுகாலம் பிற்பட்ட பெரிய புராணம், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்று துவங்குகிறது. ஜோதியன், ஆடுவான் என்று அடுத்தடுத்து ஆணாகவே கடவுளை விவரிக்கிறது. இறைவனே முதலடி எடுத்துக் கொடுக்க சேக்கிழார் இயற்றிய காவியன்ம் பெரிய புராணம் என்பதால் இதை கடவுளுடைய ஒரு சுய அறிமுகமாக (self introduction) எடுதுக்கொள்ளலாமா?

கம்பர் இந்த வம்பே வேண்டாம் என்று, 'தலைவர்' என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு பொதுச் சொல்லைப் பயன்படுத்தி 'அவருக்கு' சரண் நாங்களே என்று காலில் விழுந்துவிடுகிறார்.

ராமன், கிருஷணன், சிவன், விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி என்று கடவுள் என்ற கருத்தாக்கத்திற்கு ஆண் பெண் என்ற தோற்றங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கடவுளைப் பொன்னார் மேனியனாகவோ, பச்சைமாமலை போல் மேனியாகவோ, கதிர் மதியம் போல் முகத்தானாகவோ கவிஞர்கள் கற்பனையைக் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பு, இயற்கையைக் கடவுளாக மனிதர்கள் கண்ட
காலத்தில் கடவுள் ஆணா? பெண்ணா?

இளங்கோவடிகள், கடவுள் வாழ்த்துப் பாடுவதில்லை. மங்கல வாழ்த்துப் பாடுகிறார். சூரியன், மழை இரண்டையும் வாழ்த்தும் பாடல்கள் அதில் இடம் பெறுகின்றன.
காவிரி, வைகை ஆகிய நதிகளைப் பெண்ணாக வர்ணிக்கும் இளங்கோ மழை ஆணா பெண்ணா என்று குறிப்பிடுவதில்லை. ஆனால் பூமியைப் பெண்ணாகக் குறிப்பிடுகிறார். ( வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்)

வைதீக மதங்கள், பஞ்ச பூதங்களில் மண்ணைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஆண்களாகவே குறிப்பிடுகின்றன. மழையின் கடவுள் இந்திரன் ( பலர் நினைப்பது போல் வருணன் அல்ல. வருணன் கடலின் கடவுள். அவனது வாகனமே மீன் -மகரம்-தான்) என்ற கருத்தாக்கம் வைதீக மதங்களோடு வந்ததாக இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ் மரபில், நிலம் என்னும் நல்லாள் மட்டுமல்ல, மழையும் கூடப் பெண் கடவுள்தான். சான்று இன்றும் வணங்கப்படும், 'மாரி' அம்மன். மழைக்குத் தமிழில் 'எழிலி' (அழகானவள்) என்று ஒரு சொல் இருக்கிறது.

அக்னியைக் கும்பிடும் வழக்கமும் வைதீக மதங்களோடுதான் வந்திருக்க வேண்டும். அக்னியைக் கும்பிட ஆரம்பித்த கலாசாரத்தில், இந்திரன் மழைக்கடவுளாகியிருக்க வேண்டும். புறநானுற்றில் 'பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி' என்று ஒரு பெயர் குறிப்பிடப்படுகிறது. அவர் முந்நீர் விழவு என்று மழைக்காக விழாக்கள் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விழாக்கள்தான் இந்திர விழாக்களாக ஆகியிருக்க வேண்டும். சிலப்பதிகார இந்திர விழா மழை வேண்டி நடந்த விழா அல்ல. அது கோடைகாலத்தில், சித்திரை மாதத்துப் பெளர்ணமி அன்று நடைபெற்ற வசந்த விழா. அப்போது காவிரி நீர் நிறைந்து மலர்கள் சூடி நடந்ததாக மாதவி வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள். வைதீக மதங்கள் வருவதற்கு முன் மழை வேண்டி நடந்த விழாக்களில், இந்திரனிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.பாரியைப் போல இன்னொரு வள்ளல் பேகன் அவன் காலத்தில் வாழ்ந்த கபிலர், மழை வேண்டிப் பாடிய பாடலில் இந்திரனைக் காணோம். அவர் வேண்டிய கடவுள் முருகனாக இருந்திருக்கலாம்.

தொல்காப்பியத்தில் வருணன் என்ற சொல்லைப் பயன்படுத்தும் தொல்காப்பியர் இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. மாறாக வேந்தன் என்று எழுதுகிறார். வேந்தன் என்றால் அரசன் என்றும் கூடப் பொருள் கொள்ளலாம்.

பழந்தமிழ் நூல்களில் நெருப்பை முன்னிறுத்திச் சடங்குகள் செய்தாக அதிகம் தகவல்கள் இல்லை. தமிழில் அக்னி தீ என்று சொல்லப்படுகிறது. நல்லது அல்ல என்பதற்கு முன் அடையாகப் (prefix) பயன்படுத்தப்படுவதும் இந்தச் சொல்தான்.(உதாரணம்: தீ வினை) ஆனால் நீர் நிலைகளைக் குறிப்பதற்கு ஏராளமான சொற்கள் இருக்கின்றன. அருவி, ஆறு, சுனை, துறை, ஓடை, துருத்தி, கடல், ஊற்று, பொய்கை, மடு, குழி, குளம், ஆவி, வாவி, செறு, கேணி, கிணறு, ஊருணி, ஏந்தல், தாங்கள், இலஞ்சி, கோட்டகம், ஏரி, அனை, கால்வாய், மடை, சமுத்திரம், வாரிதி, தீர்த்தம் இவை அனைத்தும் நீர் இடங்களை (water sources) தமிழ் சொற்கள். இந்தப் பெயர்களில் அமைந்த பல ஊர்கள் இப்போதும் தமிழ் நாட்டில் இருக்கின்றன.

நீர் நிலைகளைக் காவல் காக்கும் தெய்வமாக பெண்களை பெளத்த மரபிலும் குறிப்பிடுகிறார்கள். சம்பாபதி என்பது அந்தத் தெய்வத்தின் பெயர்.இதற்கான ஆதாரங்கள் மணிமேகலையில் இருக்கின்றன. புத்த சாதக கதைகளில் ஒரு மணிமேகலை வருகிறார். அவரைக் கடல் தெய்வமாக, கடல் பயணம் செல்வோருக்கு ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றும் தெய்வமாக அந்தக் கதைகள்
சித்தரிக்கின்றன.

கெடுதி செய்யும் பெண் தெய்வங்களையும் பற்றி இளங்கோ எழுதுகிறார்: மதுரைக்கு வரும் வழியில், காட்டில், தாகத்தில் தவிக்கும் கண்ணகிக்குத் தாமரைப் பொய்கையிலிருந்து நீர் கொண்டு வரச் செல்லும் கோவலனை வனசாரிணி என்ற கானுறை தெய்வம் மயக்க முயல்வதாக சிலப்பதிகாரத்தில் ஒர் காட்சி விரிகிறது.

இயற்கை வழிபாடு இருந்த காலத்தில் கடவுள் பெண்ணாக இருந்திருக்கிறார். அவர் ஆணாக எப்போது மாறினார் என்பதுதான் என் கேள்வி. வைதீக மதங்கள் வந்த பின்னரா? அல்லது அதற்கும் முன்னரேவா? மலையாளிகளைப் போலத் தமிழ் சமூகமும் தாய் வழிச் சமூகமாக இருந்ததா? அப்படியானால் அது தந்தைவழிச் சமூகமாக மாறியது எப்போது? கி.பி.10ம் நூற்றாண்டு வாக்கில் என்று ஒரு கருத்து இருக்கிறது, அது உண்மைதானா? தந்தை வழிச் சமுகமாக மாறியதால்தான் கடவுளும் ஆண் ஆனாரா?

மற்ற மரபுகளில் - குறிப்பாக நம்மைப் போலவே பழமை வாய்ந்த சீன மரபில்- என்ன சொல்கிறார்கள்? கடவுள் ஆணா? பெண்ணா/
ஏன் இப்போது இந்தக் கேள்விகள் என்கிறீர்களா? அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததா என்று அகழ்வராய்ச்சித் துவங்கியிருக்கிறது.நாமும் நம் பக்கத்தில் தோண்டி வைப்போமே என்று இலக்கியத்தில் கை வைத்தேன். அது கேள்விகள் என்னும் சுரங்கத்தில் இறக்கி விட்டது.

இது குறித்து நன்கு அறிந்த இலக்கிய வல்லுநர்கள், மானிடவியல் அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் யாராவது கை தூக்கி விடுவார்களா? ( அவர்கள் ஆண்களாகவும் இருக்கலாம், தப்பில்லை)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது